

புதுடெல்லி,
வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள், பிறந்த தேதி, பெயர், இ-மெயில் முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் சைபர் தாக்குதலால் கசிந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆவண தொகுப்பில் இருந்து 3,897 தரவுகள் கசிந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள், பிறந்த தேதி, பெயர், இ-மெயில் முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்களும் அடங்கும் என கூறப்படுகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் கையிருப்பில் பாதிப்பு இல்லை என ஸ்டேட் வங்கி தெரிவித்து உள்ளது.
இது குறித்து வங்கி தனது எக்ஸ் தளத்தில், 'உங்கள் (வாடிக்கையாளர்கள்) வங்கி கணக்குகள் மற்றும் அதில் உள்ள நிதி அனைத்தும் எங்களிடமே பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறோம்' என குறிப்பிட்டு இருந்தது. மேலும் அதில், 'சமீபத்திய சைபர் தாக்குதல் சம்பவம் குறித்த எங்களின் முந்தைய பதிவை தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட தரவுகளை கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தனித்தனியாக தகவல் தெரிவித்துள்ளது' என்றும் கூறப்பட்டு இருந்தது.