முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி மரணம் - அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி மரணம் அடைந்தார். ஐதராபாத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி மரணம் - அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்
Published on

ஐதராபாத்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர், முன்னாள் மத்திய மந்திரி எஸ். ஜெய்பால் ரெட்டி. நிமோனியா காய்ச்சல் தாக்கி ஐதராபாத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.28 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயர் பெற்றுள்ள ஜெய்பால் ரெட்டி, 4 முறை ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினர், 5 முறை மக்களவை எம்.பி., 2 முறை மாநிலங்களவை எம்.பி., பதவி வகித்துள்ளார்.

இவர், ஐ.கே. குஜ்ரால் மந்திரிசபையில் தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரியாகவும், மன்மோகன் சிங் முதல் மந்திரிசபையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாகவும், மன்மோகன் சிங் இரண்டாவது மந்திரிசபையில் மீண்டும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, பெட்ரோலியத்துறை, அறிவியல், தொழில்நுட்பத்துறை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க தீவிர ஆதரவு தெரிவித்தவர் ஜெய்பால் ரெட்டி.

நெருக்கடி நிலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜனதாதளத்தில் சேர்ந்தார். 1999-ல் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பினார்.

போலியோ தாக்கி அதன் பாதிப்பால் வாழ்நாளெல்லாம் ஊன்றுகோலைப் பயன்படுத்தி வந்தாலும், அது அவரது பொது வாழ்வில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது இல்லை. மரணம் அடைந்த ஜெய்பால் ரெட்டிக்கு மனைவி லட்சுமி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

ஜெய்பால் ரெட்டியின் இறுதிச்சடங்கு, ஐதராபாத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நினைவிடம் அருகே நடைபெறுகிறது. இதை தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்தார். முன்னதாக ஜெய்பால் ரெட்டியின் இல்லத்துக்கு சென்று, அவரது உடலுக்கு சந்திரசேகரராவ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில், ஜெய்பால் ரெட்டி மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் சிந்தனையாளர்களின் அரசியல்வாதி; மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியை நாடு இழந்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விடுத்துள்ள செய்தியில், எனது 40 ஆண்டு கால நண்பர் ஜெய்பால் ரெட்டி. இருவரும் ஆந்திர சட்டசபையில் அருகருகே அமர்ந்து பணியாற்றி இருக்கிறோம். அவர் மிகச்சிறந்த பேச்சாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி விருது பெற்றவர் என புகழாரம் சூட்டி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜெய்பால் ரெட்டி பொதுவாழ்வில் பல்லாண்டு காலம் அனுபவம் பெற்றவர். தெளிவாக உச்சரித்து பேசும் சிறந்த பேச்சாளர்; நேர்த்தியான நிர்வாகி. அவரது மறைவால் மிகவும் சோகம் அடைந்தேன் என கூறி இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்-மந்திரிகள் சந்திரசேகரராவ் (தெலுங்கானா), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), நிதிஷ் குமார் (பீகார்) மற்றும் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com