

புனே,
பிரதமர் மோடி, இந்தியா மற்றும் அரசியலமைப்பை வெளிநாட்டு மேடைகளில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு அமித் ஷா அறிவுரை அழங்கி உள்ளார்.
புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமித்ஷா பேசியதாவது:
சர்வதேச மேடைகளில் இந்தியாவைப் பழித்துரைப்பதன் மூலம் ராகுல் காந்தி அதிகாரத்திற்கு வர முடியாது. அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். உலகம் முழுவதிலுமிருந்து இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அழைக்கப்பட்டு, பிரதமர் மோடியையும் இந்தியாவையும் விமர்சிப்பதற்கான மேடையாக அந்த மாநாடு பயன்படுத்தப்பட்டது.
உலக நாடுகள் அனைத்தும் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், அவரது வளர்ச்சித் திட்டங்களையும் பாராட்டி வருகின்றன. ஆனால், ராகுல் காந்தி சர்வதேச மேடைகளில் பிரதமரின் தலைமைத்துவத்தையும் நாட்டையும் விமர்சித்து வருகிறார். பாரத் என்று பெயரிடப்பட்ட மாநாட்டில் இந்தியாவையே விமர்சித்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இதே அரசியல் அணுகுமுறையுடன் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டால்
அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் அதிகாரத்திற்கு வர முடியாது. 12 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 76-லிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் தனியாக கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது ஆகியவை முக்கியமான சாதனைகள் ஆகும்.
காங்கிரஸ் தனது 70 ஆண்டுகால ஆட்சியில் தனியாக கூட்டுறவுத் துறை அமைச்சகத்தை உருவாக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு உருவாக்கியுள்ள இந்த அமைச்சகம், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக புனே வந்துள்ள அமித் ஷா, தேசிய கனரகப் பொறியியல் கூட்டுறவு அமைப்பின் (NHEC) மறுமலர்ச்சித் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும், மத்திய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகத்தை காணொலி வாயிலாகத் திறந்து வைக்கவும், தலேகான் தாபாடே பகுதியில் பாரத் டாக்ஸி சேவையைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார். மறைந்த மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் சிலையையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.