உள்ளாட்சி தேர்தலில் தோல்வி; ஓட்டுக்கு கொடுத்த பணம், சேலையை திருப்பி வாங்கிய வேட்பாளர்

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இந்திரம்மா என்பவர், வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
உள்ளாட்சிதேர்தலில் தோல்வி; ஓட்டுக்கு கொடுத்த பணம், சேலையை திருப்பி வாங்கிய வேட்பாளர்
Published on: 

அமராவதி,

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுத்த பணம் மற்றும் பட்டு சேலைகளைத் திருப்பி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் களம் அனல்

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில், கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு வாக்கில் பறிபோன வெற்றி

கடப்பா மாவட்டம், சேஷமாம்பாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராமாதேவி வெற்றி பெற்றார். ஆனால், அதே பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாப்பராஜ் பள்ளி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இந்திரம்மா என்பவர், வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கொலை மிரட்டல் விடுத்த வேட்பாளர்

தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பட்டுச்சேலை, பணம் மற்றும் மது பாட்டில்களை இந்திரம்மா வாரி இறைத்ததாக கூறப்படுகிறது. தோல்வி அடைந்த விரக்தியில் வாக்காளர்களை கடுமையாக திட்டிய அவர், தனக்கு எதிராக வாக்களித்தவர்கள் தான் கொடுத்த பணம் மற்றும் பரிசு பொருட்களை உடனடியாக திருப்பி தர வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், நேற்று கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் தனது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்த இந்திரம்மாவிடம், அவர் கொடுத்த பட்டுச்சேலை மற்றும் பணத்தை திருப்பி கொடுத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த காட்சிகள் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X