மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதில் தாமதம்: சோனியா-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைப்பு

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து இறுதிமுடிவு எடுப்பதற்கான சோனியா காந்தி-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதில் தாமதம்: சோனியா-சரத்பவார் சந்திப்பு தள்ளிவைப்பு
Published on

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன.

இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசுவார் என்றும், அப்போது ஆட்சி அமைப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் உயர்மட்ட குழு கூட்டம் புனேயில் நடக்க இருப்பதால், சோனியா காந்தியுடனான சரத்பவார் சந்திப்பு தள்ளிவைக்கப்படுவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் பட்டேலை வருகிற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை சரத்பவார் சந்தித்து பேசுகிறார். அதன்பிறகே அவர் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் மும்பையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

கவர்னருடன் மூன்று கட்சி தலைவர்கள் சந்திப்பு ரத்து, சரத்பவார்- சோனியா காந்தி சந்திப்பு தள்ளிவைப்பு ஆகியவை மூலம் சிவசேனா ஆட்சி அமைவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com