

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கடந்த குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணி வன்முறையாக மாறியது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 400 போலீசார் காயமடைந்தனர். இதைப்போல போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து கைது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த பேரணியின் போது டெல்லியின் புராரி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நோக்கில் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி மேற்கு டெல்லியின் ஹரி நகர் பகுதியை சேர்ந்த சுக்மீத் சிங் (வயது 35), குண்டீப் சிங் (33) மற்றும் லிபாஸ்பூரை சேர்ந்த ஹர்விந்தர் சிங் (32) ஆகியோர் வன்முறையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை தேடி வந்த போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை சிறப்பு போலீஸ் பிரிவினர் செய்துள்ளனர். இவர்களையும் சேர்த்து புராரி பகுதி வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.