

புதுடெல்லி
டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 பேருக்கு 5 நாள் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன்பின்னர் இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த சூழலில், டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் நேற்று காலை வருகை தந்தனர்.
அப்போது அவர்களிடம், இந்த பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். அவர்கள் இருவருடன் 10-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தனர். பூட்டியிருந்த வாசல் கதவுகளின் மீது ஏறி, அவர்கள் மறுபுறம் சென்றனர். இதனை தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட செய்தி தொடர்பாளர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் சென்ற அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி வழக்கறிஞர் அபிஷ்த் ஹேலா கூறும்போது, அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என்ற போலீசாரின் ஊகத்தினால் 2 பேரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள், மக்கள் திரண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர் என்று கோர்ட்டில் போலீசார் பொய்யான தகவலை கூறியுள்ளனர்.
அப்படி யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. ஒப்பந்த மீறலிலும் ஈடுபடவில்லை. வேறொரு பகுதி தொடர்பான புகார், இந்த விசயத்தில் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்த விவகாரத்தில், அவர்கள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கின்றது.