

புதுடெல்லி
டெல்லியில் கடந்த 6 மாதங்களில் 7 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், 32 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் ஜுவாலா நகரில் ரெயில்வே தண்டவாளம் ஒட்டிய பகுதியில் அமைந்த இரண்டடுக்கு கொண்ட கட்டிடம் ஒன்று நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிந்ததும் தப்பி செல்ல நேரம் இல்லாதபடி, மளமளவென சரிந்தது. 3 வயது குழந்தை மற்றும் 35 வயது என 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த 6 மாதங்களில், 7 கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததுடன், 32 பேர் பலியாகி உள்ளனர்.
இதில்,
• கடந்த 15-ந்தேதி ஓட்டல் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் காயமடைந்தனர்.
• கடந்த 4-ந்தேதி சாவ்ரி பஜாரில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 7 பேர் பலியானார்கள்.
• கடந்த அக்டோபர் 7-ந்தேதி 5 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.
• கடந்த செப்டம்பர் 29-ந்தேதி கட்டுமான பணியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர்.
• கடந்த செப்டம்பர் 6-ந்தேதி 5 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 7 பேர் பலியானார்கள்.
• கடந்த ஜூலை 8-ந்தேதி ரோகிணி செக்டார்-16 பகுதியில், 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 3 பேர் உயிரிழந்தனர்.
• கடந்த மே 30-ந்தேதி பல அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.
கட்டிடங்கள் பழமையானவையாகவும், பராமரிப்பு இன்றியும், அலட்சியம் காட்டியதும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணங்களாக கூறப்படுகின்றன. அபாய நிலையில், அங்கீகாரம் பெறாத கட்டிடங்களும் அவற்றில் உள்ளன என கூறப்படுகிறது.