டெல்லி: காற்று மாசு அதிகரிப்பு, வாட்டும் குளிர்; குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு

டெல்லியில், ஒட்டுமொத்த அளவில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 3 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்று காலை 4 டிகிரி என்ற அளவில் உள்ளது.
இதில், ஆயாநகர் பகுதியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரியாக பதிவாகி இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த ஞாயிறன்று இரவில் பல்வேறு இடங்களிலும் குளிர் அலை பரவியது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டது.
பாலம் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரியாக பதிவாகியது. சப்தர்ஜங் நகரில் 4.8 டிகிரியாக பதிவாகி இருந்தது. அது இன்றிரவு 3 டிகிரியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. இதேபோன்று ரிட்ஜ் ஸ்டேசன் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரியாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18.8 டிகிரியாகவும் இருந்தது.
டெல்லியில் காற்றின் தரமும் கூட மோசமடைந்து உள்ளது. இதன்படி, ஒட்டுமொத்த அளவில் டெல்லியில் காற்று தர குறியீடு 337 ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இதுதவிர, காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களின் பல பகுதிகளிலும் கடுமையான குளிர் மக்களை வாட்டி வருகிறது.






