

புதுடெல்லி
டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ரூ.1.25 லட்சம் கோடி செலவில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்று முதல்-மந்திரி ரேகா குப்தா கூறினார்.
டெல்லியில் நமோ யமுனா ரிவர் சபாரி என்ற திட்ட நிகழ்ச்சி தொடக்க விழா இன்று நடந்தது. இதில், முதல்-மந்திரி ரேகா குப்தா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நிதின் கட்காரியின் உயரிய ஒருங்கிணைப்புடன், டெல்லியில் ரூ.1.25 லட்சம் கோடி செலவில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
பெரிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. புதிய விரைவு சாலைகள் கட்டப்பட்டு உள்ளன. டெல்லி அரசு சுற்றுச்சூழல் தொடர்பாக, கடந்த 21 மாதங்களில் ஆற்றிய பணியை பார்க்கும்போது, டெல்லி மக்களை பார்த்து நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
இதற்கு முந்தின அரசாங்கம் இதனை பற்றி நினைத்ததுண்டா? இந்த முறையில் நடந்து கொண்டுள்ளதா? என கேட்டார். நம்முடைய திருவிழாக்களையும் ஒருபுறம் கொண்டாடி விட்டு, மறுபுறம் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த முடியும் என உறுதிப்படுத்தியது உண்டா? என கேட்டார்.
டெல்லியில் குளிர்காலம் நெருங்க கூடிய சூழலில், காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடித்ததன் தொடர்ச்சியாக, காற்று மாசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது என்றும் தகவல் வெளியானது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில், டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையிலான அரசு பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்புக்கு வாகனங்கள் வெளியேற்றும் மாசுக்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதனால், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களுக்கு டெல்லியில் அனுமதி இல்லை. இந்த நடைமுறை நவம்பர் 1-ந்தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வாகனங்களாக இருந்தபோதும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் உடன் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதுபோல விறகு அடுப்பு, நிலக்கரி அடுப்புகள் பயன்படுத்துவதையும் தடுக்கிறது. கட்டுமான பணிகள், வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்றவற்றுக்கு உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிக்காக அச்சு, சமூக ஊடகங்களை டெல்லி போலீசார் பயன்படுத்தி வருவதுடன், டெல்லி எல்லையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.