ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ‘ஐபோன் 16’ வழங்கிய டெல்லி நிறுவனம்!

ஊழியர்களின் உழைப்பை மதிக்கும் விதமாக டெல்லி நிறுவனம் செய்துள்ள இந்த கார்ப்பரேட் தீபாவளி பரிசு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ‘ஐபோன் 16’ வழங்கிய டெல்லி நிறுவனம்!
ஐபோன் 16
Published on: 

புது டெல்லி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்கள் அனைவருக்கும் புத்தம் புதிய ‘ஐபோன் 16’ ஸ்மார்ட்போன்களைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

டெல்லி அலுவலகத்தில் நெகிழ்ச்சி

புது டெல்லியின் ரோகிணி பகுதியில் பைனான்சர்சாப் (Financersaab) என்ற நிதிச் சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் மேஜைகளிலும் விதவிதமான வண்ண ரிபன்கள் கட்டப்பட்ட ‘ஐபோன் 16’ பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தங்களுக்கு ஆப்பிள் போன் பரிசாகக் கிடைத்ததை அறிந்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ

இந்த நெகிழ்ச்சியான தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்த நிறுவனம், அதனைத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவுடன், “இங்கே போட்டிகள் இல்லை. உங்களுக்கு தீபாவளி பரிசாக என்ன கிடைத்தது?” என்ற தலைப்பையும் பதிவிட்டிருந்தது. இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.

நகைச்சுவையான கமெண்ட்டுகளும் புலம்பல்களும்

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், "உங்கள் நிறுவனத்தில் வேலை காலியிடங்கள் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்க, வழக்கமாக தீபாவளிக்கு 'சோன்பப்டி' மிட்டாய் பெட்டிகளையும், டைரிகளையும் பரிசாகப் பெறும் பிற நிறுவன ஊழியர்களோ, "எங்களுக்கு ஒரு சோன்பப்டி பாக்ஸ் தான் கிடைத்தது" என்று தங்களது நிறுவனங்களை நினைத்து நகைச்சுவையாகப் புலம்பி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஊழியர்களின் உழைப்பை மதிக்கும் விதமாக டெல்லி நிறுவனம் செய்துள்ள இந்த கார்ப்பரேட் தீபாவளி பரிசு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கார்ப்பரேட் உலகில் வழக்கமாக வழங்கப்படும் இனிப்புகளுக்குப் பதிலாக, லட்சக்கணக்கில் செலவு செய்து ஆப்பிள் போன்களைப் பரிசளித்த இந்த நிறுவனத்தின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

X