டெல்லி: வீடு புகுந்து துப்பாக்கி முனையில் முன்னாள் படை வீரரிடம் கொள்ளை; ஒருவர் கைது

துப்பாக்கி முனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு கும்பல் தப்பி விட்டது.
புதுடெல்லி,
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வசித்து வருபவர் பீம்சென் (வயது 86). இவருடைய மகன் சந்தீப். மருமகள் நீலம் மற்றும் பேரனுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான பீம்சென், கினாரி மார்க்கெட் பகுதியில் நகை தொழில் செய்து வந்திருக்கிறார். அவர் மகன், மருமகளுடன் வீட்டில் இருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
சம்பவத்தின்போது, 3 பேர் முகமூடி அணிந்து வந்துள்ளனர். குடும்பத்தினரின் உறுப்பினர் ஒருவர் பேரை கூறி அழைத்து, கதவை தட்டியுள்ளனர். கதவை திறந்ததும், ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த அவர்கள் பல இடங்களில் ஆவணங்களை தேடி பார்த்துள்ளனர். இதனை பார்த்து பதறி அவர்களை தடுக்க வந்த பீம்சென்னின் பேரனை துப்பாக்கியை காட்டி, கைகளை கட்டிப்போட்டு, வாயில் டேப் போட்டு ஒட்டி விட்டனர்.
வீட்டில் இருந்த நகை, விலை மதிப்பில்லா கற்கள் என ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து கொண்டனர். 3,550 டாலர் மதிப்பிலான பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. கடைசியாக, குடும்பத்தினரை சமையலறையின் உள்ளே தள்ளி, பூட்டி விட்டு வெளியேறினர்.
அவர்கள் சென்றது தெரிந்ததும், பீம்சென் குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டனர். இதில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்டனர். அந்த கும்பல், துப்பாக்கி முனையில் பீம்சென் குடும்பத்தினரை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், அலோக் குமார் மிஷ்ரா (வயது 35) என்பவரை நொய்டா நகரில் கைது செய்தனர். அவர், அரசு ஊழியர் ஒருவரிடம் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். தப்பியோடிய மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.






