15 -ம் தேதி வரை நீதிமன்ற காவல்: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

பகவத் கீதா, ராமாயணம், நீரஜ் சவுத்ரியின் ஹவ் பிஎம் டிசைட்ஸ் ஆகிய நூல்களை சிறைக்குள் எடுத்து செல்ல கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
15 -ம் தேதி வரை நீதிமன்ற காவல்: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும், நேரில் ஆஜராகவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. எனினும், கெஜ்ரிவாலின் வழக்கை ஐகோர்ட்டு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்கவும் டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ந்தேதி அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை அன்றிரவு கைது செய்தனர்.

இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், கெஜ்ரிவாலுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த கைது நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் என கூட்டணியில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது. இந்த விசயத்தில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும்.

இந்த நிலையில், அமலாக்க துறை காவலில் உள்ள கெஜ்ரிவாலை டெல்லி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை தரப்பில் காவல் நீட்டிப்பை கோரவில்லை. எனினும், கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் பாஸ்வேர்டுகளை தர மறுக்கிறார்.

ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com