

புதுடெல்லி
டெல்லியில் புதிய மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துள்ள சூழலில், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதுவும், குளிர்காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வரும் சூழலில், டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், தடுக்கவும் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையிலான அரசு பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி டெல்லியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு அவற்றுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருக்கிறதா?, இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடும். சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலைய ஊழியர்கள் எரிபொருள் வழங்குவது இல்லை.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்புக்கு வாகனங்கள் வெளியேற்றும் மாசுக்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களுக்கு டெல்லியில் அனுமதி இல்லை. இதன்படி, டெல்லி அல்லாத பிற பகுதிகளில் பதிவான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படும்.
எனினும், ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைக்கான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மின்சாரம், சி.என்.ஜி. மற்றும் பி.எஸ்.6 ரக கார்களை இயக்க அனுமதிக்கப்படும்.
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக, டெல்லி போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சிங்கு எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அந்த வாகனங்களை, ஏ.ஐ. வசதியுடன் கூடிய தானியங்கி வாகன எண் கண்டறியும் கேமராக்களை பயன்படுத்தி தடுத்து, நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வாகனங்களாக இருந்தபோதும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் உடன் வைததிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.