டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

நடிகர்கள் மோகன்லால், பிரபுதேவா, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்பட 47 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி,

இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் 112 பேருக்கு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக கடந்த குடியரசு தின விழா அன்று மத்திய அரசு அறிவித்தது. அவர்களில் முதல்கட்டமாக 47 பேருக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று விருதுகளை வழங்கினார். பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லால், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா, மறைந்த பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நாயரின் மனைவி ஆகியோருக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா, பாடகர் சங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், டிரம்ஸ் சிவமணி, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

47 பேருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டாலும் பலர் விருதுகளை பெறுவதற்கு வரவில்லை. பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட ஒரே நபரான எழுத்தாளர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தேர் விருது பெறுவதற்கு வரவில்லை. அதேபோல மறைவுக்கு பின்னர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி நடிகர் காதர்கான் சார்பிலும் யாரும் விருதை பெறவில்லை.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டாக்டர் தம்பதியான ரவீந்திர தியோராவ் கோலே, ஸ்மிதா ரவீந்திர கோலே ஆகியோர் தங்களின் தனிப்பட்ட பணிகளுக்காக இருவரும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். 85 வயதான கர்நாடக இசை மேதை கோபாலன் தந்திரி ஜெயன் சக்கர நாற்காலியில் வந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த மத்திய மந்திரிகள் கலந்துகொண்டனர்.

எஞ்சியவர்களுக்கு வருகிற 16-ந்தேதி நடைபெறும் விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com