

புதுடெல்லி
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இருளிலும் வேலை செய்யும் நவீன கேமராக்களுடன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. தொடர்ந்து சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. அக்கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறது.
போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ள சூழலில், தடையை மீற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படையினர், டெல்லி காவல் துறையினர் என ஏறக்குறைய 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இரவோடு இரவாக 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை ஒட்டிய பிற மாநில எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லி போலீசார் அவர்களுடைய சீருடையுடன் பாடிகேம் எனப்படும் உடலுடன் ஒட்டிய வகையில் கேமராக்களை சேர்த்து அணிந்து கொள்ள உள்ளனர். தோள்களில் அவற்றை அணிந்து கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த வகை கேமராக்கள் இருளில் கூட நன்றாக வேலை செய்யும். இதுபற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, இந்த கேமராக்கள் எங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கும். வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போது, டெல்லி போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
அதனால், இந்த கேமராக்கள் நாங்கள் பிறருக்கு ஏதேனும் செய்திருக்கிறோமா? இல்லையா? என்பது பற்றி நிரூபிக்கும். எல்லாவற்றையும் அது பதிவு செய்யும் என்றார். ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 3-ந்தேதி, அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது, டெல்லி போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்று பெண் பத்திரிகையாளர்கள் 3 பேர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து டெல்லி காவல் ஆணையாளருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்கு இந்திய பிரஸ் கிளப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது. போராட்ட செய்தியை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்களை போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த புகார் மீது, டெல்லி போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டது. இந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் புகார் தொடர்பாக புதுடெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.