டெல்லி: தேர்தல் ஆணையாளர் விவகாரத்தில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்

பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி:  தேர்தல் ஆணையாளர் விவகாரத்தில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்
Published on: 

புதுடெல்லி

இந்திய தேர்தல் ஆணையாளர் பதவி விலகக்கோரிய விவகாரத்தில் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஜந்தர் மந்தரில் போராட்டம்

எனினும், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று, ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பஸ் ஒன்றில் புறப்பட்டு டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர்.

தள்ளுமுள்ளு

எனினும், அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பின்னர் பஸ்சில் இருந்து இறங்கினர். இதனால், போலீசாருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அக்கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதியிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய ஆன்மாவின் மீதும், இந்திய ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்படும் தடியடி இது என்று அவர்கள் தெரிவித்தனர்.

துணை ராணுவம் குவிப்பு

இதுபற்றி காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் கூறும்போது, தேர்தல் ஆணையரை நேற்று சந்திக்க விரும்பினோம். ஆனால், அவர் எங்களை சந்திக்கவில்லை. நாங்கள் போராட கூடாது என டெல்லி போலீசார் கூறுகின்றனர்.

அதனால், நாங்கள் ஜந்தர் மந்தர் நோக்கி சென்று ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என்றார். அதுவே, போராட்டம் நடத்துவதற்கான களம். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அது தொடரும் என்றார். அவர்கள் பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், போலீசார் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com