

சென்னை,
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த ஆண்டு நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
கார் வெடிப்பு தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் முகமது(உயிரிழந்தவர்) உள்பட குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும், அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) என்ற அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-கொய்தாவும், அதன் அனைத்து கிளை அமைப்புகளும் 2018 ஜூன் மாதம், மத்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.