டெல்லி கலவர வழக்கு - உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

டெல்லி கலவர வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டிருந்தார்
புது டெல்லி,
டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உள்பட சிலர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் கோரி ஐகோர்ட்டை உமர் காலித் அணுகியிருந்த நிலையில் ஜாமீன் மறுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்தநிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் அஞ்சாரியா அடங்கிய அமர்வு , உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குல்பிஷா பாத்திமா, மீரான் ஹெய்டர், ஷிபா உர் ரெஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அஹமத் ஆகிய மற்ற 5 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






