பரீட்சைக்கு பயந்து ஓடிப்போன சிறுவன் 2,000 கி.மீ. பயணம்: குடிசையில் வாழ்ந்தது கண்டுபிடிப்பு

பரீட்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய டெல்லி சிறுவன் தமிழகம்-கர்நாடக எல்லை அருகே மீட்கப்பட்டான்.
பரீட்சைக்கு பயந்து ஓடிப்போன சிறுவன் 2,000 கி.மீ. பயணம்: குடிசையில் வாழ்ந்தது கண்டுபிடிப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், கடந்த மாதம் 21-ம் தேதி காணாமல் போனான். இதுபற்றி தனது தந்தைக்கு தகவல் அனுப்பியிருக்கிறான். அதில், 11-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுத தனக்கு மனம் இல்லை என்பதால் வீட்டை விட்டு செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறான்.

இதுபற்றி அவனது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி, சுமார் 2,000 கி.மீ. தூரம் பயணம் செய்து தமிழகம்-கர்நாடக எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி பகுதியில் இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டனர்.

இதுபற்றி காவல்துறை துணை கமிஷனர் விக்ரம் சிங் கூறியதாவது:-

11-ம் வகுப்பு இறுதித்தேர்வை எழுத விரும்பாத மாணவன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறான். அவனை தேடுவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவனை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவன் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்றது தெரியவந்தது.

பெங்களூருவில் தெரிந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு ரெயில் மூலம் அங்கு சென்றடைந்த சிறுவன், தமிழ்நாடு- கர்நாடக எல்லை அருகே உள்ள கட்டுமான பகுதியில் கூலி வேலை செய்யத் தொடங்கி உள்ளான். போலீஸ் தனிப்படை அங்கு சென்றபோது அங்குள்ள குடிசையில் இருந்துள்ளான். அவன் அங்கிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com