டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு
Published on

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன. அதேவேளை, மணீஷ் சிசோடியாவை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கு கோர்ட்டு அனுமதியுடன் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சிசோடியா இன்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அமலாக்கத்துறை வழக்கில் சிசோடியாவுக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சோசோடியா தாக்கல் செய்த மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com