தொகுதி மறுவரையறை மசோதா; ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்- மல்லிகார்ஜுன கார்கே

மத்திய அரசு கொண்டுவர உள்ள அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கார்கே கூறினார்.
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
Published on: 

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கும், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பு திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு தயாராகி வருகிறது. வரும் 30-ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவர உள்ள அரசியலமைப்பு திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மக்களவையில் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதன் மூலம் அதிகாரத்தை நிரந்தரமாக தங்கள் கைகளில் வைத்திருக்க பாஜக முயற்சிக்கிறது.

இந்த மசோதா பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும். அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.எனவே, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X