

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிக்க வைத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. உண்மையில், இது பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்கான திட்டமாகும். மக்களவையின் மொத்த தொகுதிகளை 850 ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்க பாஜக முயற்சிக்கிறது.மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே அமல்படுத்த முடியும்.
எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் எங்களது நிலைப்பாட்டில் 100 சதவீதம் உறுதியாக உள்ளன. சிலர் மட்டும் எங்களுடன் இல்லை. அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். இங்கு பிரச்சினை 850 மக்களவை தொகுதிகள் தொடர்பானது. இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்பட, இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். இந்திய ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள்.
850 தொகுதிகள் கொண்டுவரும் மசோதா எங்களுக்கு தேவையில்லை. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 ஆகவே வைத்திருக்கலாம். சாதிவாரி கணக்கெடுப்பை பயன்படுத்துவதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அனைத்துக் கட்சிகளும் இடம்பெறும் குழுவை அமைக்கலாம். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்திற்கும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 850 தொகுதிகள் என்ற பெயரில் தேர்தலில் முறைகேடு செய்வதற்கும், தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதற்கும் முயற்சி நடக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.