

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 991 பேருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 86 சதவீதம் பேர் 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும்படி மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, டெங்கு பாதிப்பு அதிகம் நிலவும் அரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிபுணர் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான மாநில அரசுகளின் பொது சுகாதார நடவடிக்கைகளில் இந்த மத்திய குழுக்கள் உதவும்.
மேலும், டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவது, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் இருப்பு, பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, கொசு தடுப்பு மருந்துகளின் இருப்பு ஆகியவற்றில் மாநிலங்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்க நிபுணர் குழுக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டில் தாங்கள் கண்டறிந்த விஷயங்கள் குறித்து மாநில சுகாதார அதிகாரிகளிடம் எடுத்துரைக்குமாறும் நிபுணர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.