

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 30 மணிநேரம் காத்திருப்பதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக மாக காணப்படுகிறது. வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி பாத கங்கையம்மன் கோவில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தற்போது 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக, தேவஸ் தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் 85 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 44 ஆயிரத்து 155 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். தேவஸ்தான அறிவித்த ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 76 லட் சம் ஆகும். இதுதவிர அன்று 4 லட்சத்து 66 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 3 லட்சத்து 43 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப் பட்டுள்ளது. 3 ஆயிரத்து 583 பேருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.