தர்மேந்திர பிரதான் ராஜினாமா: 'கரையான்' போல அரித்து வெற்றி கண்ட 'கரப்பான்'!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து வருவதால், 12 ஆண்டு கால பா.ஜ.க. அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா: 'கரையான்' போல அரித்து வெற்றி கண்ட 'கரப்பான்'!
Published on

புதுடெல்லி,

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் கரையான் போல அரிக்கத் தொடங்கிய கரப்பான், தனது போராட்டத்தில் வெற்றி கண்டிருக்கிறது.

தலைமை நீதிபதி கருத்து

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், கடந்த மே மாதம் 15-ந் தேதி நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சில வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்த கருத்தை நையாண்டி செய்யும் விதமாக பலர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதன் வெளிப்பாடாக உருவானதுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.

யார் இந்த அபிஜித் தீப்கே?

இந்த கட்சியின் நிறுவனரான அபிஜித் தீப்கே, மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த அவர், தலைமை நீதிபதியின் கருத்தை சுட்டிக்காட்டி, "அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?" என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து 'ஜென் ஸி' மற்றும் 25 வயதிற்கு உள்பட்ட இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்றன.

"தனியாக ஒரு தளத்தை உருவாக்க வேண்டும்" என்று பலர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று ஆன்லைன் நையாண்டி அரசியல் அமைப்பு உருவானது.

கட்சியில் சேர தகுதி என்ன?

இந்த கட்சியில் சேருவதற்கான தகுதியும் வெளியிடப்பட்டு இருந்தது. அதாவது, "தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும். வேலை இல்லாதவராக இருக்க வேண்டும். தலைமை நீதிபதி குறிப்பிட்டது போல, நீங்கள் எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும்" என்று விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

இது இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பலர் கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர்.

பின்தொடர்பவர்கள் அதிகரிப்பு

தற்போதைய நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு 2 கோடியே 61 லட்சம் பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இது, மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. (95 லட்சம்), ஆண்ட கட்சியான காங்கிரஸ் (1 கோடியே 48 லட்சம்) ஆகிய கட்சிகளின் சமூக வலைதளங்களை பின் தொடர்பவர்களைவிட அதிகம்.

இவ்வாறு, நையாண்டி கட்சியாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சீரியசான ஒரு பிரச்சினையை கையில் எடுத்தது. அதாவது, நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறி, தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீட் மறுதேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டாலும், நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது.

டெல்லியில் குவிந்தனர்

இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி "சலோ சன்சாத்" என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி

20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்காட்டாயமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தை கலைத்தனர். இதில், காவல் துறை மற்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் சிலர் காயம் அடைந்தனர்.

அரசுக்கு முன்வைத்த 3 கோரிக்கைகள்

இந்த நிலையில், மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, போராட்டக்காரர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 3 கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். அதாவது, "நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். சீரழிந்த கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்பவைதான் அவை.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி, நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் என பா.ஜ.க. அரசு சிக்கித் தவித்தது. தற்போது, வேறு வழியில்லாமல் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். இப்படி, கரையான் அரிப்பதை போல எதிர்ப்பை பதிவு செய்து கரப்பான் பூச்சி கட்சியினர் வெற்றி கண்டிருக்கின்றனர்.

பா.ஜ.க. அரசுக்கு பின்னடைவு

போராட்டக்காரர்கள் மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து வருவதால், 12 ஆண்டு கால பா.ஜ.க. அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

என்றாலும், போராட்டக்காரர்கள் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் மத்திய அரசு சந்தேகிக்கிறது. எனவே, போராட்டத்திற்கு மத்திய அரசு மேலும் பணியுமா?, அல்லது திருப்பி பதிலடி கொடுக்குமா? என்பது போக போகத் தெரியும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com