

புதுடெல்லி,
உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் விசாரணையின்போது கூறிய "கரப்பான் பூச்சிகள்" குறித்த கருத்து, இந்திய இளைஞர்களை குறிவைத்து அல்ல என்றும், போலி சட்டப் பட்டங்களை பயன்படுத்தி சட்டத் தொழிலுக்குள் நுழைந்தவர்களையே குறிப்பிட்டதாகவும் இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: போலி சட்டப் பட்டங்களை வைத்து சிலர் சட்டத் தொழிலில் நுழைந்திருப்பது குறித்து இந்திய பார் கவுன்சிலே ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. அந்த விவகாரத்தின் பின்னணியில்தான் நீதிமன்ற விசாரணையின்போது நான் அந்தக் கருத்தை தெரிவித்தேன். போலி பட்டங்கள் மூலம் பின்வாசல் வழியாக தொழிலுக்குள் நுழைந்தவர்களைப் பற்றியே நான் குறிப்பிட்டேன். சட்டத் துறையை எப்படி சுத்தப்படுத்துவது என்பதுதான் அப்போது விவாதமாக இருந்தது .
நான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்போது ஏராளமான இளைஞர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள். நாட்டின் இளைஞர்கள்தான் எனக்கு ஊக்கமும் வலிமையும் அளிக்கிறார்கள். இந்திய இளைஞர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. நாட்டின் எந்தக் குடிமகனாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்டங்கள் வழங்கும் வரம்பிற்குள் அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. நீதிமன்றத்தின் மூலம் தங்களுடைய குறைகளை தீர்த்துக்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கும் உச்சநீதிமன்றம் எப்போதும் திறந்தே இருக்கும்" என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வேலைவாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் குறித்து தலைமை நீதிபதி கூறிய கருத்து, இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள்" என ஒப்பிட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், "கரப்பான் ஜனதா கட்சி" என்ற பெயரில் போராட்டமும் தொடங்கப்பட்டது. இதையடுத்து மறுநாளே விளக்கம் அளித்த தலைமை நீதிபதி, தனது கருத்தை ஊடகத்தின் ஒரு பகுதி தவறாக மேற்கோள் காட்டியதாக தெரிவித்திருந்தார்.
"போலி மற்றும் போலியான பட்டங்களை பயன்படுத்தி சட்டத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குள் நுழைந்தவர்களையே நான் விமர்சித்தேன். நாட்டின் இளைஞர்களை ஒருபோதும் விமர்சிக்கவில்லை. இந்தியாவின் நிகழ்கால மற்றும் எதிர்கால இளைஞர்கள் மீது எனக்கு பெருமையும் நம்பிக்கையும் உள்ளது. வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண்கள் இளைஞர்கள்தான்" என்று அவர் அப்போது கூறியிருந்தார்.