அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க முன்வந்த திக்விஜய் சிங்

அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் முன்வந்துள்ளார்.
அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல் காந்திக்கு தனது வீட்டை வழங்க முன்வந்த திக்விஜய் சிங்
Published on

போபால்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர். அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'உங்களைப்போன்ற தாராள உள்ளம் கொண்டவருக்கு ஒட்டுமொத்த தேசமும் உங்கள் குடும்பம்தான். வாசுதெய்வ குடும்பக உணர்வுதான் நமது நாட்டின் அடிப்படை குணநலன் ஆகும். ராகுல் ஜி எனது வீடு, உங்கள் வீடுதான். உங்களை வரவேற்கிறேன். எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார். மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது வீட்டில் அறிவிப்பு ஒன்றையும் தொங்க விட்டுள்ளார். அதில், 'எனது வீடு ராகுல் காந்தியின் வீடு' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், 'நாட்டை ஆளும் சர்வாதிகாரிகள் எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டை அபகரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களின் வீடுகள் ராகுல் காந்திக்காக இருக்கின்றன என்பது அவர்களுக்கு தெரியாது. பாபா விஸ்வநாதரின் நகரில் உள்ள எங்கள் வீட்டை ராகுல் காந்திக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம்' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com