

சென்னை,
கொழும்புவில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் (புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்) கலந்துகொள்ளவும், இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை திறந்து வைக்கவும், தமிழர்களை சந்தித்துப்பேசவும் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கொழும்பு புறப்பட்டார். அங்கு போய்ச் சேர்ந்த அவரை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டின் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்கு சென்றார்.
இந்த நிலையில், இன்று புத்தமதத்தினரின் மிகப்பெரும் நிகழ்ச்சியான சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிலையில் இலங்கை தலைநகரான கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஏர் இந்தியா இந்த சேவையை துவங்கும் என தெரிவித்துள்ளார்.