அவுரங்காபாத் கொரோனா சிகிச்சை மையத்தில், பெண் நோயாளியை மானபங்கம் செய்த டாக்டர் பணிநீக்கம்; சட்டசபையில் அஜித்பவார் தகவல்

கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் நோயாளியை மானபங்கம் செய்த டாக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சட்டசபையில் அஜித்பவார் கூறினார்.
அஜித்பவார்
அஜித்பவார்
Published on

டாக்டர் பணி நீக்கம்

அவுரங்காபாத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் டாக்டர் ஒருவர் பெண்நோயாளியை மானபங்கம் செய்த சம்பவம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. மனிஷா சவுத்திரி பேசினார். அப்போது அவர், "கொரோனா சிகிச்சை மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல. இது துரதிருஷ்டமானது. அரசு மீது மக்களுக்கு பயமில்லை. இந்த விவகாரத்தில் மாநில உள்துறை உடனடியாக பதில் அளிக்க வேண்டும்" என்றார்.

இதேபோல தேவேந்திர பட்னாவிசும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செயல்பாட்டு நெறிமுறைகள் வேண்டும் என முதல்-மந்திரிக்கு எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் "அவுரங்காபாத் சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை முடிந்த பிறகு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களுக்கான செயல்பாட்டு நெறிமுறைகள் மார்ச் 31-ந் தேதிக்குள் வெளியிடப்படும்" என்றார்.

இதேபோல எல்கர் பரிஷத் மாநாட்டில் ஒரு குறிப்பிட்ட மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சர்ஜீல் உஸ்மானி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித்பவார் உறுதி அளித்தார்.

அதே நேரத்தில் தேசபாதுகாப்பு குறித்த தகவல்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்த அர்னாப் கோஸ்சுவாமியின் கைதுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்ததையும் அஜித்பவார் விமர்சித்து பேசினார். அதில் அவர், தேசம் மற்றும் மாநில பாதுகாப்பு விஷயத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது என பெயரை குறிப்பிடாமல் பா.ஜனதாவை கண்டித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com