

திருவனந்தபுரம்,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், கேரள மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி. டோமின் ஜே.தச்சங்கரிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.
மேலும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவருக்கு 30.84 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, தச்சங்கரியை திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புரா மத்திய சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கிருந்தபடி அவர் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணையின்போது, தண்டனையை அறிவிக்கும்போது தனது உடல்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு தச்சங்கரி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவர் வகித்த பதவியைக் கருத்தில் கொண்டு எந்த விதமான சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்று அரசுத் தரப்பு வாதிட்டது.
முன்னதாக தச்சங்கரி, தனது வருமான ஆதாரங்களுக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளை சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், எர்ணாகுளத்தில் உள்ள விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு(VACB) அதிகாரிகள் தச்சங்கரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அரசுத் தரப்பு வாதத்தின்படி, தச்சங்கரியிடம் ரூ.64.70 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தச்சங்கரி தனது அறியப்பட்ட வருமான ஆதாரங்களை விட 135.80 சதவீதம் அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார் என விசாரணை குழு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.