பா.ஜனதாவின் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள்; டி.கே.சிவக்குமார் பேச்சு

பா.ஜனதாவின் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவின் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள்; டி.கே.சிவக்குமார் பேச்சு
Published on

மைசூரு:

பா.ஜனதாவின் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

750 கிலோ மைசூர்பாகு மாலை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பிரஜாத்வானி யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள். இந்த யாத்திரை நேற்று மைசூருவில் நடந்தது. மைசூரு ரெயில் நிலையம் அருகே இருக்கும் ஜே.கே. மைதானத்தில் பிரஜாத்வானி யாத்திரையின் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்துகொள்வதற்காக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் பஸ்சில் வந்தனர். அப்போது அவர்களுக்கு மைசூரு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு 750 கிலோ எடையிலான ராட்சத மைசூர்பாகு மாலை கிரேன் மூலம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பொதுகூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

நன்றாக தெரியும்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். ஆனால் பா.ஜனதா இதனை விமர்சிக்கிறது. 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க சாத்தியமில்லை என்று கூறுகிறது. நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தவன். மின்சாரத்தை எப்படி சேமிக்க வேண்டும், இலவசமாக எப்படி வழங்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

அதேபோல், சித்தராமையா நிதி மந்திரியாக இருந்து பலமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதனால் அவருக்கு பொருளாதாரம் பற்றியும், நிதி சேமிப்பது பற்றியும் நன்கு தெரியும். இதனால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்குவதில் எந்த சிரமமும் இருக்காது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு அந்த திட்டங்களை செயல்படுத்திய பிறகு இதுபற்றி விமர்சிப்பவர்களுக்கு தெரியவரும்.

மக்கள் முடிவு கட்டுவார்கள்

பா.ஜனதாவினர் 40 சதவீத கமிஷன் வாங்குவதை நிறுத்தினால் மாநிலத்தை வளர்ச்சி அடைய வைக்கலாம். ஆனால் ஒவ்வொரு துறையிலும் பா.ஜனதாவினர் சதவீதம் அடிப்படையில் கமிஷன் வாங்குகிறார்கள். இப்படி கமிஷன் வாங்கினால் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடையும். பா.ஜனதாவினரின் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மக்கள் முடிவு கட்டுவார்கள். இங்குள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாததால், மோடியை அடிக்கடி வரவழைத்து கொண்டிருக்கிறார்கள்.

பிரசாரத்திற்காக அடிக்கடி கர்நாடகம் பிரதமர் மோடி, மக்கள் பிரச்சினைக்காக ஒருமுறையாவது கர்நாடகம் வந்துள்ளாரா?.

பிப்ரவரி மாதத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம். நான் தென்கர்நாடக மாவட்டங்களிலும், சித்தராமையா வட கர்நாடக மாவட்டங்களிலும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com