

புதுடெல்லி,
இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அதேவேளை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இருந்து மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்க வகை செய்வதுடன் இந்த நடைமுறை அடுத்த 25 ஆண்டுகள் அமலில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) அதிகரிக்கலாம்.
இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா போதிய ஆதரவு இன்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதேவேளை, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் 30 ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் சந்தித்து பேசினர். அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது டிஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.