

புதுடெல்லி,
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒ துக்கீடு வழங்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனை 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதிகளை மறுவரையறை செய்து, 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நினைத்தது. அதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 131-வது பிரிவில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த திருத்த மசோதாவுடன் தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களின் திருத்த மசோதா ஆகிய மசோதாக்களும் முன்மொழியப்பட்டன.
இவற்றை விவாதித்து நிறைவேற்றுவதற்காக 3 நாட்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஆளும் தரப்பினர் ஏற்பாடு செய்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதியில் இதுகுறித்த அறிவிப்பு வந்தபோது எதிர்க்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மத்திய அரசு, இந்த மசோதாக்களை தாக்கல் செய்வதில் பிடிவாதமாக இருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே 3 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்துக்கு 18 மணி நேரம் வரை சபாநாயகர் ஓம் பிர்லா நேரம் வழங்கினார். ஆனால் அதையும் தாண்டி விவாதம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.25 மணி வரை விவாதம் தொடர்ந்தது. 2-வது நாளாக நேற்றும் விவாதம் மாலை 5 மணிக்கு பிறகும் நீடித்தது.
இந்த விவாதங்களில் அனல் பறக்கும் வாதம் நடந்தன. இந்த திருத்த மசோதாக்களால் தென் மாநிலங்கள், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறையும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினார்கள். ஆனால் எந்த மாநிலத்திலும் குறையாது. மாறாக அதிகரிக்கும் என்று ஆளுங்கட்சி தரப்பினர் கூறினர்.
உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் தற்போது உள்ள 39 மக்களவை தொகுதிகள் இனி 59 தொகுதிகளாக அதிகரிக்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிபட தெரிவித்தார். பிரதமர் மோடியும் இதற்கு உத்தரவாதம் அளித்தார். இப்படியாக விவாதங்கள் 2 நாளாக சூடு பிடித்தன.
இந்தநிலையில் நேற்று மாலை விவாதம் முடிவு பெற்றது. அவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பதில் தந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே, அவரது பதில் உரையும் சூடாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற அவையில் இடம்பெற்று வாக்களிப்பவர்களில் 3-ல் இருபங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்கு அளிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மசோதாக்கள் நிறைவேறும்.
இந்த பெரும்பான்மை ஆளும் கூட்டணி அரசுக்கு மக்களவையிலும் இல்லை. மாநிலங்களவையிலும் இல்லை. ஆனாலும் ஏதோ தைரியத்தில் மசோதாவை தாக்கல் செய்து வாக்கெடுப்பு நடத்தியது. வாக்கெடுப்பு மின்னணு முறையில் நடத்தப்பட்டது. இதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்? என்பதை மக்களவை செயலாளர் உத்பால்சிங் குமார் விளக்கினார். மின்னணு முறையில் வாக்குகள் சரிவர பதிவாகாத பட்சத்தில் அது பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது. முதலில் மின்னணு வாக்குப்பதிவில் மொத்தம் 489 வாக்குகள் பதிவாகின. இதில் 278 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 வாக்குகள் எதிராகவும் பதிவாகி இருந்தன. பின்னர் இது மறுஆய்வு செய்யப்பட்டது. அப்போது 528 வாக்குகள் பதிவாகின. இதில் 298 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 வாக்குகள் எதிராகவும் இருந்தன. அவைக்கு வந்தவர்களில் யாரும் வாக்களிக்காமல் இல்லை.
பதிவான 528 வாக்குகளில் 3-ல் 2 பங்கு என்பது 352 ஆகும். ஆனால் மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளே பதிவாகி இருந்தன. 54 வாக்குகள் குறைவாக இருந்தன. இதனால் மத்திய அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்தது. இதனை சபாநாயகர் அவையில் அறிவித்தார். சபாநாயகர், அவையில் பதிவான வாக்குகளை குறிப்பிட்டு, "அவைக்கு வருகை தந்து வாக்களித்த உறுப்பினர்களில் 3-ல் இருபங்கு பெரும் பான்மை இல்லாததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை" என்று கூறினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற கடைசிநாள் அமர்வு இன்று நடைபெற்றநிலையில் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய அனுமதி கோரி, தி.மு.க. எம்.பி. வில்சன் நோட்டீஸ் வழங்கியுள்ளார். தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இடஒதுக்கீடு செய்யவும், அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதா நிறைவேற்றவும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமல் மகளிர் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த நிலையில், 2023ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கக்கூடாது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.