மேற்கு வங்காளத்தில் மீண்டும் டாக்டர்கள் போராட்டம் நடத்த திட்டம்...காரணம் என்ன?

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
File image
File image
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

இதன்படி விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாகவும் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த 13ம் தேதி சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதால் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த மேற்கு வங்காள டாக்டர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக டாக்டர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

"நாங்கள் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்த முடிவெடுத்து அனுமதி கோரியிருக்கிறோம். சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே எங்களது போராட்டம் நடைபெறும். 10 நாட்கள் போராட்டம் நடத்துவதற்கு கொல்கத்தா ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளோம். சிபிஐ இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com