

புதுடெல்லி
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கி நடந்து வருகிறது. இதில், மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து ஓம் பிர்லாவை நீக்க கோரி 118 எம்.பி.க்களின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று குரல் வாக்கெடுப்பு நடந்தது.
எனினும், கடும் அமளி மற்றும் கோஷத்திற்கு இடையே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்தபடி கைகளை உயர்த்தி அதனை தோல்வியடைய செய்தனர். அவையில் பெரும்பான்மையான எம்.பி.க்களை பா.ஜ.க. வைத்துள்ள சூழலில், இந்த தீர்மானம் எளிதில் தோல்வியடைந்தது.
சபாநாயகரை பதவி நீக்க கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், ஓம் பிர்லா அவையில் இன்று உறுப்பினர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர், என்னுடைய கடமையை வெளிப்படையாகவும், பாகுபாடற்ற முறையிலும் செய்வேன் என மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த சூழலில் அவையில் அவர் கூறும்போது, சில உறுப்பினர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மைக் அணைக்கப்படுகிறது என புகாராக கூறியுள்ளனர். இதற்கான பதிலை முன்பே நான் கூறியுள்ளேன். மைக்கை அணைக்கவோ அல்லது ஆன் செய்யவோ சபாநாயகரிடம் பட்டன் எதுவும் கிடையாது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட இந்த நாற்காலியில் அமர்ந்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்.
யாருக்கு பேச அனுமதி அளிக்கப்படுகிறதோ, அப்போது அவருடைய மைக் ஆன் செய்யப்படும் என்றார். அவையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் எந்த உறுப்பினருக்காவது திருப்தியோ அல்லது அதிருப்தியோ ஏற்படலாம். ஆனால், விதிகளை அமல்படுத்த வேண்டியது என்னுடைய பொறுப்புணர்வுடன் கூடிய கடமையாகும் என்று அவர் கூறினார்.
அவையின் கண்ணியம் பராமரிக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படுவதற்காகவே நான் பணி செய்து வருகிறேன். அதனாலேயே கூட்டத்தொடரில் சில எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்யும் முடிவை மேற்கொண்டேன் என்றும் அவர் கூறினார்.