

புதுடெல்லி,
கொரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ, பிரதமரின் நெருக்கடி கால நிவாரண நிதிக்கு(பி.எம்-கேர்) நன்கொடை வழங்குமாறு பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் ஆயிரம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், கொரோனா வைரஸ் பரவுவதால் இதற்கு முன் எப்போதும் சந்தித்திராத பெரும் சவாலை நாடு சந்தித்து இருப்பதாகவும், எனவே சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்கி பொது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் அரசின் முயற்சிக்கு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.