கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை: மேற்கு வங்காளத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி கைது

கொலை நடந்ததைத் தொடர்ந்து, பிரணிதாவுடன் தங்கியிருந்த அவரது கணவர் எனக் கருதப்பட்ட பிரவத் தாஸ் (வயது 36) திடீரென மாயமாகியிருந்தார்.
கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கின் குற்றவாளி கைது.
பிரவத் தாஸ்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டாப்பாடியில், பெண் மற்றும் 4 வயது சிறுமியின் உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டி ஆற்றில் வீசிய கொடூர இரட்டைக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரவத் தாஸ் மேற்கு வங்காளத்தில் வைத்து கேரள போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

3 பிளாஸ்டிக் சாக்கு பைகள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சீரக்கடவு பகுதியில் பவானி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் உள்ளூர் மக்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி வழக்கம் போல மக்கள் மாடு மேய்க சென்றனர். அப்போது அங்கு கிடந்த 3 பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து துர்நாற்றம் வீசியது.

கொடூர சம்பவம்

இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அகலி மற்றும் புதூர் போலீசார் சாக்குகளைத் திறந்து பார்த்தபோது, அதில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழுகிய ஒரு பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம்

போலீசாரின் தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரணிதா (வயது 25) மற்றும் அவரது 4 வயது மகள் ஜோஹிதா என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அட்டப்பாடியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வேலை செய்வதற்காக கேரளா வந்திருந்தனர்.

செல்போன் சிக்னல் ஆய்வு

கொலை நடந்ததைத் தொடர்ந்து, பிரணிதாவுடன் தங்கியிருந்த அவரது கணவர் எனக் கருதப்பட்ட பிரவத் தாஸ் (வயது 36) திடீரென மாயமாகியிருந்தார். கேரள சைபர் செல் போலீசாரின் உதவியுடன் அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் கேரளா-தமிழ்நாடு எல்லையைக் கடந்து மேற்கு வங்காளத்திற்கு தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளி கைது

இதையடுத்து, அகலி டி.எஸ்.பி அசோக் தலைமையிலான அகலி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஷாத் உள்ளிட்ட 3 பேர் கொண்ட தனிப்படை போலீசார் உடனடியாக மேற்கு வங்காளத்திற்கு விரைந்தனர். அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன் பதுங்கியிருந்த பிரவத் தாஸை நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் வாக்குமூலம்

கைது செய்யப்பட்ட பிரவத் தாஸ், பெண் மற்றும் குழந்தையைக் கொலை செய்து ஆற்றில் வீசியதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், விசாரணையில் அவர், "கொல்லப்பட்ட பிரணிதா எனது மனைவி அல்ல, சிறுமி எனது மகளும் அல்ல; கடந்த 2 மாதங்களாக மட்டுமே எனக்கு அவர்களுடன் பழக்கம் இருந்தது" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர்களின் பின்னணி என்ன? எதற்காக இந்த கொடூரக் கொலை அரங்கேற்றப்பட்டது? என்ற முழுமையான விபரங்களை அறிய குற்றவாளியை கேரளா அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com