நடத்தையில் சந்தேகம்: வீட்டுக்குள் கேமரா பொருத்திய கணவர்.. திருமணமான 47 நாட்களில் புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நடத்தையில் சந்தேகம்: வீட்டுக்குள் கேமரா பொருத்திய கணவர்.. திருமணமான 47 நாட்களில் புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
Published on

மும்பை,

நடத்தை சந்தேகத்தால் வீட்டுக்குள் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்ததால் விரக்தி அடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை அருகே உள்ள தானேயை அடுத்த அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் நிதின்தில்கர். டாக்டர். இவருக்கும், விசாகா (வயது26) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

கூடுதல் வரதட்சணை

திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு விசாகாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடல் அளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விசாகா தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டுக்குள் கண்காணிப்பு கேமரா

இதற்கிடையே தனது மகள் கணவர் வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக விசாகாவின் பெற்றோர் சிவாஜி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது டாக்டர் நிதின் தில்கர், தனது மனைவி விசாகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவரது ஒவ்வொரு அசைவையும், நடமாட்டத்தையும் கண்காணிப்பதற்காக வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார். விசாகா யாரிடம் பேசுகிறார்? என்ன செய்கிறார்? என்பதை இந்த கேமராக்கள் மூலம் அவர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் எல்லையை தாண்டி விசாகா அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக பேசினால் கூட, அவரை மிருகத்தனமாக கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். புகுந்த வீட்டில் நரக வேதனையை அனுபவித்த விசாகா, இந்த துயரத்தை தனது தாயிடம் போனில் கூறி கதறி அழுதுள்ளார்.

மகளின் நிலையை கேட்டு பதறிய பெற்றோர், நேரில் வந்து அவரை மீட்டு செல்வதற்குள்ளாகவே, விசாகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய டாக்டர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டாக்டர் கணவரின் விபரீத புத்தியால், திருமணமான 47 நாட்களில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com