இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என்று டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது
Published on

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் மீதான இரண்டாம் நாள் விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது டி.டி.வி.தின கரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது:-

தேர்தல் கமிஷனில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தரப்பில் போலி ஆவணங்களைத்தான் தாக்கல் செய்துள்ளனர் என்று எங்கள் தரப்பு ஆதாரத்துடன் கூறிய போதும் அதனை ஏன் தேர்தல் கமிஷன் ஏற்கவில்லை என்பதுதான் புரியவில்லை.

கட்சியின் பொதுச்செயலாளரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்படி பொதுச்செயலாளரை நீக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலாளர் பதவியை யாரும் ரத்து செய்ய முடியாது.

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் ஜெயலலிதா ஒருமனதாக பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அவருடைய மறைவுக்கு பிறகு சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்,

ஆனால் எதிர் தரப்பினர் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்த போது கட்சியின் விதிகள் அனைத்தையும் மீறி செயல்பட்டு உள்ளனர். தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டது. ஏனெனில், எதிர் தரப்பினருக்கு பலமுறை பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. எங்கள் தரப்புக்கு சரியான முறையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தேர்தல் கமிஷன் தனது போக்கில் செயல்பட முடியாது. அது ஒரு வழக்கை விசாரிக்கும்போது கட்சியின் விதிகளையும் அது தொடர்பான சட்டவிதிகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

24-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com