

ஆக்ரா,
உத்திரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட வெற்றி பெறவில்லை. இந்த பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இதில் பெரும்பாலான பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பொதுத்தேர்வு எழுதி இருந்தார்கள்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 72.29. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 71.55. இது மாநில தேர்வு சதவீதத்தை விட குறைவு.
உ.பி.யில் தாய்மொழி இந்தி. மேலும் இந்தி கட்டாய பாடமாகவும் இருக்கிறது. ஆனாலும் 10-ம் வகுப்பில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 776 பேரும், 12-ம் வகுப்பில் 7 லட்சத்து 81 ஆயிரத்து 276 பேரும் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.
இந்தியை தவிர ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் அதிக அளவில் மாணவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 80.8 சதவீதம் பேரும், உருதில் 91 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் தாய் மொழியான இந்தியில் 79.2 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி அடைந்துள்ளார்கள்.