

மைசூரு.
மைசூரு தசரா விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது.
மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரி முதல் நாளன்று தொடங்கி 9 நாட்களும் தசரா விழா வெகு விமரிசையாக நடைபெறும். 10-ம் நாளில் ஜம்புசவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் நடக்கும். அப்போது யானைகள் புடைசூழ ஒரு யானை, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு கம்பீர நடைபோட்டு செல்லும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதை காண லட்சக்கணக்கானோர் மைசூருவில் கூடுவார்கள். அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில், சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருள, எந்தவொரு பின்புலமும் இல்லாமல் பொதுவான நபர் ஒருவர் அம்மன் மீது பூக்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தசரா விழா தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை கவி மடத்தின் மடாதிபதி கவி சித்தேஸ்வரா சுவாமி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் நேற்றே மைசூருவை வந்தடைந்தார்.
அவர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் தங்கியிருக்கிறார். இன்று காலை சரியாக 11.50 மணி முதல் 12.13 மணிக்குள் தனுஷ் லக்கனத்தில் தசரா விழா தொடங்கப்படுகிறது. சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் தெப்பகுளத்தில் புனித நீராடி பட்டுடுத்தி விசேஷ அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கவி மடத்தின் மடாதிபதி கவி சித்தேஸ்வரா சுவாமி பூக்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து முதல்-மந்திரி கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், உணவு மேளா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன. அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி கொலு மற்றும் மன்னர் யதுவீர் எம்.பி.யின் தனியார் தர்பார் நடைபெறுகிறது. மேலும், தசரா விழாவையொட்டி மைசூரு நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.