இ20 விவகாரம்; அரசு தனது முடிவை தெளிவுபடுத்தும்வரை பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும் - கெஜ்ரிவால்

மத்திய அரசின் முடிவால் கோவாவில் சுமார் 85 முதல் 90 சதவீத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இ20 விவகாரம்; அரசு தனது முடிவை தெளிவுபடுத்தும்வரை பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும் - கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

இ20 என்று அழைக்கப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டத்திற்கு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக கோவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது;-

“மோடி அரசு நாடு முழுவதும் 'இ20’ எரிபொருள் முறையைத் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இருசக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், கார்கள், எஸ்.யு.வி (SUV) மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மைலேஜ் கணிசமாக குறைந்துள்ளது. சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை மைலேஜ் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த முடிவால் கோவா மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் சுமார் 7 சதவீத குடும்பங்களிடம் மட்டுமே கார் உள்ளது. ஆனால் கோவாவில் கிட்டத்தட்ட 45 சதவீத குடும்பங்கள் கார் வைத்துள்ளனர். கோவாவில் சுமார் 86 சதவீத மக்கள் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். சில குடும்பங்கள் கார் மற்றும் இருசக்கர வாகனம் என இரண்டையும் வைத்திருக்கின்றனர். எனவே, கோவாவில் சுமார் 85 முதல் 90 சதவீத குடும்பங்கள் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இ20 எரிபொருளுக்கான முறையான சோதனைகளை அரசு நடத்தவில்லை. இ20 விவகாரம் தொடர்பாக அரசு தனது முடிவை தெளிவுபடுத்தும்வரை பெட்ரோல், டீசல் வாகனங்கள் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com