

புதுடெல்லி,
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ஜெயப்பிரதாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக பா.ஜனதா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய ஆசம் கானுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் ஆசம் கான், தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி, நாளை காலை 6 மணியில் இருந்து 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் உத்தரவிட்டது.
ஆசம் கான் மீது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் இந்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.