

புதுடெல்லி,
மதமாற்ற நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டில் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் பெற்ற விவகாரத்தில் ராஜஸ்தான் மத போதகர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ரவிமோகன் பகடியா என்பவர் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார். இவர் தலித் மற்றும் பழங்குடியினரை மதமாற்றுவதற்காக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.
குறிப்பாக அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் தோமஸ் யூஜின் என்பவரிடம் இருந்து ரூ.2.34 கோடி பணம் பெற்றதாகவும், இதை மதமாற்ற நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு (எப்.சி.ஆர்.ஏ.) புறம்பாக இந்த பணத்தை பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் வெளிநாட்டினருடன் தொடர்பில் இருந்து வரும் பகடியா, அவர்களின் அறிவுறுத்தல்களின்படி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலித் மக்களிடையே மதமாற்ற நடவடிக்கைகளுக்காக நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூரில் பகடியா தொடர்புடைய 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடந்ததாகவும் அவர்கள் கூறினர். மத போதகருக்கு எதிராக நடந்த இந்த சோதனை ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.