பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதேரா, 2007-08 ஆம் ஆண்டில் தனது நிறுவனம் செய்ததாக கூறப்படும் நில பேரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இன்று (ஏப்ரல் 15ம் தேதி) அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) முன் ஆஜரானார்.

முன்னதாக அரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வாதேரா விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதேரா ரூ.58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதில் ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எப் நிறுவனத்திடமிருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாகவும் 2011ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.

அரியானாவில் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

அமலாக்கத்துறை இதற்காக ஏற்கனவே கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு ஒரு முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. இதையடுத்து தற்போது இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் ராபர்ட் வாதேரா இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். முன்னதாக இதுதொடர்பாக பேசிய ராபர்ட் வாதேரா, ''இந்த நடவடிக்கை என்னையும் எனது மைத்துனரும் காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியையும் மவுனமாக்குவதை நோக்கமாகக் கொண்ட "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்" ஒரு பகுதி. இது மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் இருந்ததிலிருந்தே, வதேரா மீது ஊழல் மற்றும் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பா.ஜ.க. குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com