

புதுடெல்லி,
மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் ஒரு காலநிலை நிகழ்வு, எல்நினோ என அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காலநிலையில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நடப்பில் இருக்கும் இந்த எல்நினோ அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என உலக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை மைய செயலாளர் செலஸ்டி சாவ்லோ வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்பானிய மொழியில் எல்நினோ என்றால் ஆண் குழந்தை என்று பொருள். ஆனால் அது உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கும் பொருளாதாரங்களுக்கும் பெருத்த அடியை கொடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது' என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், 'எல்நினோ தாக்கத்தால் நாம் ஏற்கனவே இடையூறுகள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளை சந்தித்து வருகிறோம். எல்நினோ தீவிரமடைவதால் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றும் கூறியுள்ளார். இது மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை முறைகளிலும், அதனுடன் தொடர்புடைய வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற அபாயங்களிலும் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே எல்நினோவின் தாக்கம் இந்தியாவில் மழைப் பொழிவை பெருமளவில் குறைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் மழைப்பொழிவு 16 சதவீதம் வரை குறைந்ததற்கு எல்நினோவே காரணம் எனவும் அது தெரிவித்து உள்ளது.
அந்தவகையில் கடந்த 1901-ம் ஆண்டு முதல் தற்போது வரை மிகவும் வெப்பமான ஆகஸ்டு மாதமாக கடந்த மாதம் பதிவாகி இருக்கிறது. இதற்கு எல்நினோவும் ஒரு காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல இந்த மாதத்துக்கான மழைப்பொழிவும் நீண்ட கால சராசரியில் 91 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1971 முதல் 2020-ம் ஆண்டு வரை செப்டம்பர் மாத நீண்ட கால சராசரி 167.9 மி.மீ. ஆகும். இந்தியாவில் பருவமழைக்கு பிந்தைய வானிலை நிலவரம் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், எல்நினோ காரணமாக இந்தியாவில் குளிர்காலம் சுருங்கி மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என டெல்லியை சேர்ந்த காலநிலை ஆய்வு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.