

சிவமொக்கா,
தசரா விழாவில் யானை மிரண்டு ஓடியதால் வெள்ளி அம்பாரி கீழே விழுந்ததில் அம்மன் சிலை சேதம் அடைந்தது. கடைசி நேரத்தில் அம்பாரியை சுமக்கும் யானை மாற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் நேற்று முன்தினம் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி தசரா விழா நடந்து முடிந்தது. மைசூருவை போல சிவமொக்காவிலும் தசரா விழா தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் சிவமொக்காவில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதற்காக சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து சாகர், சோமண்ணா, பகதூர் ஆகிய 3 யானைகள் அழைத்து வரப்பட்டன.
இந்த தசரா விழாவில் சாகர் யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 650 கிலோ வெள்ளி அம்பாரியை சுமக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக அந்த யானைக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜம்பு சவாரிக்கு முந்தைய நாளில் திடீரென வெள்ளி அம்பாரியை சுமக்கும் யானை மாற்றப்பட்டது. அதாவது சாகருக்கு பதிலாக சோமண்ணா யானை அம்பாரியை சுமக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 650 கிலோ வெள்ளி அம்பாரியை சுமந்து கொண்டு சோமண்ணா யானை புறப்பட்டது. தொடக்கத்தில் சோமண்ணா யானை சாந்தமாக சுமந்துக் கொண்டு சென்றது. இந்த ஊர்வலம் எஸ்.பி.எம். சாலையின் அருகே வந்தபோது. அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் மிரண்டு போன சோமண்ணா யானை. மதம் பிடித்தது போல அங்கும், இங்குமாக ஓடியது. இதில் 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை துவம்சம் செய்தது.
மேலும் வெள்ளி அம்பாரியும் கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சோமண்ணா யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஜம்பு சவாரி ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு டிராக்டரில் அம்மன் சிலை சுதந்திர பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் சிவமொக்கா மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் யானை மிரண்டு ஓடியதால் கீழே விழுந்த வெள்ளி அம்பாரியில் இருந்த சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலையும் சேதம் அடைந்துள்ளது. அதாவது, அம்மனின் 2 கைகளும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அம்மன் அணிந்திருந்த ஆபரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தசரா ஊர்வலத்தில் கடைசி நேரத்தில் யானை மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவமொக்காவில் கடந்த தசரா விழாக்களில் சாகர் யானைதான் அம்பாரியை சுமந்து வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடைசி நேரத்தில் சாகர் யானை மாற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 யானைகளும் நேற்று லாரிகள் மூலம் சக்ரேபைலு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தசரா ஊர்வலத்தில் யானை மிரண்டு ஓடிய சம்பவம் குறித்து நேற்று கலெக்டர் பிரபலிங்க கவலிகட்டி தலைமையில் சிவமொக்கா கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை சேதம். அம்பாரி சேதம் அடைந்தது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.