அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல; கர்நாடக ஐகோர்ட் கருத்து

அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் நீதிபதி எம்.ஐ. அருண் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக ஐகோர்ட்
கர்நாடக ஐகோர்ட்
Published on: 

பெங்களூரு,

அமலாக்கத்துறை தனது கவனத்துக்கு வரும் அனைத்து விவகாரங்களிலும் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும், அது ஒன்றும் சூப்பர் போலீஸ் கிடையாது என்றும் கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் நீதிபதி எம்.ஐ. அருண் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாலூர் நில ஒதுக்கீட்டுக் குழுவின் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.ஒய். நஞ்சேகவுடா மற்றும் சிலர், சுமார் 38 பேருக்கு 80 ஏக்கர் நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது கோலார் மற்றும் சிக்கபள்ளாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணியாளர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பான தகவல்களை லோக் ஆயுக்தா போலீசாரிடம் அமலாக்கத்துறை பகிர்ந்தது. ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத்துறையே தனியாக புகார் அளித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.இதனை எதிர்த்து நஞ்சேகவுடா உள்ளிட்டோர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஐ. அருண், அமலாக்கத்துறைக்கு தன்னிச்சையாக அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்று தெரிவித்தார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அடிப்படை குற்றத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. அந்த அடிப்படை குற்ற வழக்கு முடிவுக்கு வந்துவிட்டால், அதன் அடிப்படையில் தொடரப்படும் பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையும் தொடர முடியாது என்று நீதிபதி கூறினார்.

மேலும், பிற சட்டங்களின் கீழ் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால், அவற்றை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைக்க வேண்டும். அதனை விடுத்து தானாகவே விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.அரசின் வெவ்வேறு அமைப்புகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வும், அதிகார வரம்புகளும் உள்ளன. ஒரு அமைப்பு மட்டுமே உச்ச அதிகாரம் கொண்டதாக செயல்பட முடியாது. சட்டத்தில் அதிகாரங்களுக்கான கட்டுப்பாடுகளும், சமநிலையும் அவசியம்.அமலாக்கத்துறை ஒன்றும் தனது கவனத்துக்கு வரும் அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தும் சூப்பர் போலீஸ் கிடையாது என்று நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாக குறிப்பிட்டார். இதையடுத்து, நஞ்சேகவுடா உள்ளிட்டோர் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளை ரத்து செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

X