வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்... காதலியை மலையில் இருந்து தள்ளி கொன்ற காதலன்

காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் ஸ்ரீபாத் வதார் கடும் ஆத்திரமடைந்தார்.
வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்... காதலியை மலையில் இருந்து தள்ளி கொன்ற காதலன்
Published on: 

மும்பை,

மராட்டிய மாநிலம், கோலாப்பூர் மாவட்டம் கர்கோட்டி நகரை சேர்ந்தவர் தரன்னும் (வயது 23). இவரும், ஸ்ரீபாத்வதார் (25) என்ற வாலிபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தரன்னுமிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் அவர் தனது காதலன் ஸ்ரீபாத்வதாருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் ஸ்ரீபாத் வதார் கடும் ஆத்திரமடைந்தார். இதற்கிடையே, கடந்த 9-ந்தேதி பிற்பகல் ஸ்ரீபாத் வதார்,"திருமணத்திற்கு முன்பு நாம் பேசும் கடைசி சந்திப்பு இதுதான்” என்று நைசாகப்பேசி தனது காதலியை பூதர்காட் பகுதியில் உள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

பள்ளத்தாக்கில் தள்ளிக்கொலை

அங்கு வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு தரன்னும் மறுக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ரீபாத் வதார், திடீரென காதலி தரன்னும்மை நீர்வீழ்ச்சிக்கு அருகில் மலையில் இருந்து ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய ஸ்ரீபாத் வதார், நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது காதலிக்கு தாகம் எடுத்ததாகவும், அவருக்கு தண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது காதலி மாயமாகி விட்டார் என்று தனது குடும்பத்தினரிடம் கூறி நாடகமாடி உள்ளார்.

காதலன் கைது

இதற்கிடையே பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பூதர்காட் போலீசார், பெண் காணாமல் போனதாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காத லனை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முர ணான தகவல்களை கூறினார். இதனால் அவர் மீது போலீசா ருக்கு சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஸ்ரீபாத் வதார் திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை பள்ளத்தாக்கில் தள்ளிக்கொலை செய்த கொடூரத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் அடையாளம் காட்டிய பள்ளத்தாக்கில், மீட்புக்குழுவினரின் உதவியுடன் தரன்னுமின் உடல் மீட்கப்பட்டது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காதலன் ஸ்ரீபாத் வதாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com